Recent News

ஜம்மு காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய முயன்றபோது, சில வழக்கறிஞர்கள் அதனை தடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், சிறுமியின் பெற்றோர், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை ஜம்முவில் இருந்து சண்டிகருக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்குமாறும் அரசுக்கு ஆணை பிறப்பித்தார். இந்த வழக்கு, வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் இந்த உத்தரவை வரவேற்பதாக, சிறுமியின் பெற்றோரும், அவர்களது வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.