Recent News

சாதனைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் கோவையை சேர்ந்த கலைமணி. தேநீர் கடை நடத்தும் இவர், மராத்தான் போட்டிகளில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை குவித்து சாதனை படைத்து வருகிறார்.

கோவை தாமஸ் வீதியில் உள்ள தேநீர் கடையில் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருக்கும் இவர், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 45 வயதான இவர், 3 குழந்தைகளுக்கு தாயான பின்னர், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.

திருமணத்தின் போதே, மனைவியின் விளையாட்டு ஆர்வம் தெரிந்திருந்தாலும், சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகக் கூறுகிறார் கலைமணியின் கணவர் அழகு. நாளிதழ் ஒன்றில், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் பங்கேற்குமாறு கலைமணியிடம் கூறியதாக கலைமணி தெரிவிக்கிறார்.

ஜோசப் என்ற பயிற்சியாளரின் உதவியுடன் மாரத்தான் போட்டிகளுக்கு தயாராகி வரும் கலைமணி, இதற்காக காலை 5 மணிக்கே பயிற்சியில் ஈடுபடுகிறார். பெங்களூர் மாரத்தான் போட்டியில் பெற்ற தோல்வி, அண்மையில் அன்னூரில் நடந்த மாரத்தானில் வெற்றி பெற உத்வேகம் அளித்தாக கூறுகிறார்.